Monday, 16 September 2013

பெண் சிசு கொலை அதிகரிப்பால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சி தகவல்



வாஷிங்டன்:"அதிகரித்து வரும், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த, அமெரிக்காவில், கருச்சிதைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியது முதலே, இந்தியா மற்றும் சீனா உட்பட, பல நாடுகளில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கணிசமான அளவிற்கு குறையத் தொடங்கி விட்டது' என, அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, அமெரிக்காவின், கொலம்பியா பல்கலை பேராசிரியர், மாத்யூ கூறியதாவது:
மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறிந்து, பெண் குழந்தை என்றால், கருவிலேயே அழித்துவிடுவது என்ற மேதாவித்தனமான முடிவுகள் தான், இன்று, உலக அளவில், பெண் குழந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.
அமெரிக்க மக்கள் தொகை கவுன்சில் தலைவராக இருந்த, பெர்னார்டு பெரல்சன் போன்றவர்களும் இக்கருத்தையை வலியுறுத்தி வந்தனர். இதுபோன்ற காரணங்களால் தான், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் தம்பதியர், பெண் குழந்தை என்றால், அதை, கருவிலேயே அழிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டனர்.
இதன் காரணமாகத் தான், இந்தியா, சீனா போன்ற நாடுகளில், பெண் குழந்தைகளின் விகிதம், ஆண் குழந்தைகளை விட, மிகவும் குறைவாக இருக்கிறது.
இந்தியாவில், ஒவ்வொரு, 100 பெண் குழந்தைகளுக்கு, 126 ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால், பிற்காலத்தில், பெண் குழந்தைகளுக்கான தேவை அதிகரிக்கும்.
ஒரு கட்டத்தில், பெண்களே கிடைக்காத நிலை ஏற்பட்டு, பெண்களை விற்றுவிடுதல், கடத்தல் அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்றவையும் நடக்கலாம்.
இந்தியாவில், 2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில், பெண்களுடன் ஒப்பிடும்போது, 3.7 கோடி ஆண்கள், அதிகமாக இருக்கின்றனர்.
கருவில் இருக்கும் குழந்தைகள் ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டறியும் சோதனைகளுக்கு தடை விதிக்கப்படுவதுதான், இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment