புதுடில்லி:ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை
சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், சமீபத்தில், மத கலவரம் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்னை பற்றி விவாதிக்க, தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்திற்கு, நேற்று டில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விஞ்ஞான் பவன் அரங்கில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை வகித்து, பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:மத கலவரங்கள் உருவாக, தேச விரோத சக்திகளே, காரணமாக இருக்க முடியும். நாட்டின் ஒருமைப்பாட்டில், நம்பிக்கை அற்ற சக்திகளே, இது போன்ற சம்பவங்களின், பின்னணியில் உள்ளன. சமீப காலமாக, நாட்டின் பல பகுதிகளில், மத கலவரங்கள், தலைதூக்கி வருகின்றன. நாளுக்கு நாள், இது போன்ற கலவரங்கள், அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.சமூக நல்லிணக்கத்திற்கு, குந்தகம் விளைவிக்கும் வகையில் நடைபெறும், இந்த மத கலவரங்களை, மாநில அரசுகள், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இத்தகைய கலவரங்களில் ஈடுபடுவோர், யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன், நிறுத்த வேண்டும். இந்த தலையாய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது.ஜம்மு காஷ்மீரில் கிஷ்த்வார் மற்றும் அசாம் மாநிலத்தில், மத கலவரங்கள், நடைபெற்று உள்ளன. இந்த சம்பவங்கள், அடுத்தடுத்து நடைபெற்று உள்ளன. தவிர, இந்த கலவரங்களில் எல்லாம், எண்ணற்ற அப்பாவி மக்கள், பலியாகியுஉள்ளனர்; ஏராளமான சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சூழ்நிலையில் தான், முசாபர் நகரில், கலவரம் நடந்துள்ளது.
சமீப காலமாகவே, உத்தர பிரதேச மாநிலத்தில், இது போன்ற கலவரங்கள் நிறைய நடைபெறுகின்றன. இதை தடுத்து நிறுத்த, மாநில அரசு, முன்வர வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தைமுடுக்கி விட்டு, சிறப்பு கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்து, இது போன்ற சம்பவங்களை, கட்டுப்படுத்த வேண்டும். இது போன்ற கலவரங்கள் மூலம், அரசியல் ஆதாயம் அடைய, முற்படக் கூடாது.சமூக வலைதளங்களில், ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மத கலவரங்களை தூண்டி விடும் போக்கு, தென்படத் துவங்கியுள்ளது. அதனால், சமூக வலைதளங்கள் முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும். தவறான காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதை, தடுத்து நிறுத்தவும், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில், கடைபிடிக்கப்படும் அணுகு முறையை, மறுபரிசீலனை செய்ய, அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
No comments:
Post a Comment