Thursday, 19 September 2013

குடிபோதையில் தள்ளி விளையாடியபோது லாரி மோதி ஆட்டோ டிரைவர் பலி



குடிபோதையில் தள்ளி விளையாடிய போது எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்தவர் மீது லாரி மோதியதில் அவர் பலியானார். இதுதொடர்பாக நண்பர்கள் 3 பேரை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
நண்பர்கள் விளையாட்டு
சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனி பகுதியை சேர்ந்தவர் கருணா(வயது32). இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகன்(38), சதீஷ்(32), முரளி(36). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். இதில் முரளி அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 4 பேரும் முரளி வேலை செய்யும் டாஸ்மாக் கடையில் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் புளியந்தோப்பு பேசின் மேம்பால நெடுஞ்சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டாக ஜெகன், சதீஷ், முரளி ஆகியோர் கருணாவை தள்ளி விட்டனர். குடிபோதையில் இருந்த கருணா சாலையின் நடுவே விழுந்தார்.
லாரி மோதி சாவு
அப்போது அந்த வழியாக திருவொற்றியூர் நோக்கி சென்ற லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கருணா உயிரிழந்தார்.
இதுபற்றி அருகில் இருந்தவர்கள் புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த கருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கில் நண்பர்கள் கைது
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார் லாரியை ஓட்டி வந்த திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த டிரைவர் கதிர்வேல்(32) மீது வழக்குபதிவு செய்தனர்.
விளையாட்டாக தள்ளிவிட்டதில் பலியான கருணாவின் நண்பர்கள் ஜெகன், சதீஷ், முரளி ஆகியோர் மீது கொலை வழக்குபதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

No comments:

Post a Comment