Monday, 30 September 2013

மருந்துகளின் வீரியத்தன்மை குறித்து, மனிதர்களிடம் சோதனைமேற்கொள்ளக் கூடாது' -சுப்ரீம் கோர்ட்


புதுடில்லி: 'மருந்துகளின் வீரியத்தன்மை குறித்து, மனிதர்களிடம் சோதனை நடத்துவதற்கான, தெளிவான சட்ட வழிமுறைகள் வகுக்கும் வரை, எவ்வித மருந்து பரிசோதனைகளும் மேற்கொள்ளக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
பொது நலன் வழக்கு: 'ஸ்வத்ய அதிகார் மஞ்ச்' என்ற, தனியார் தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், பொது நலன் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில், 'வெளிநாட்டு மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை பரிசோதிக்கும் ஆய்வுகளமாக, நம்நாடு உள்ளது. மருந்துகளின் வீரியத்தன்மையை ஆராய்வதற்காக, விலங்குகள் போல, நம நாட்டினர் பயன்படுத்தப்படுகின்றனர்; இது, தடுத்து நிறுத்தப்பட வேண்டும்' என தெரிவித்திருந்தது. இந்த வழக்கு, நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' முன், சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, இத்தகைய சோதனைகளுக்கு தடை விதித்து, சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், மத்திய சுகாதாரத் துறை செயலர் மேற்பார்வையில் தான், மருந்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், மனுதாரரின் கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு, மத்திய அரசிடம், சுப்ரீம் கோர்ட் கேட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், '2005-2012ம் ஆண்டுகளில், நம் நாட் டில், மனிதர்களிடம் நடத்தப்பட்ட மருந்து வீரிய சோதனையில், 2,644 பேர் இறந்துள்ளனர். 12 ஆயிரம் பேருக்கு, விபரீத விளைவுகள் ஏற்பட்டுள்ளன' என தெரிவிக்கப்பட்டிருந்தது
இதை அறிந்த நீதிபதி லோதா, மத்திய அரசை நேற்று கண்டித்தார். நீதிபதி, தன் உத்தரவில் கூறியிருந்ததாவது: ஆழ்ந்த உறக்கத்திலிருந்து மத்திய அரசு விழித்தெழ வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தாத மருந்துகளின் வீரியத்தை சோதனையிடும் ஆய்வுக்கு, நம் நாட்டில் மனிதர்களைப் பயன்படுத்தக் கூடாது; அதுவரை எவ்வித சோதனைகளும் மேற்கொள்ளக் கூடாது. எந்தெந்த வழிமுறைகளின் கீழ், இத்தகைய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து, மத்திய அரசு, ஆலோசனை கூட்டத்தை கூட்ட வேண்டும். அதில், அனைத்து மாநில சுகாதார செயலர்களும் பங்கேற்று, சட்டத்தை வரைய வேண்டும். குறிப்பாக, வெளிநாட்டு மருந்து நிறுவனங்களின் ஆய்வுகளின்போது, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சரியான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு, நீதிபதி, தன் உத்தரவில் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment