Monday, 23 September 2013

‘ஒசாமா’ என்று கூறி சீக்கிய பேராசிரியர் தாக்கப்பட்டார்



அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பிராபஜோத் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் மனைவி, ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் விருந்துக்கு சென்றனர். மனைவி, மகனை வீட்டில் கொண்டுபோய் விட்டு பிறகு அவர் நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றார்.
அப்போது சிலர் திடீரென்று அவரை வழிமறித்தனர். நீ ‘ஒசாமா’ என்றும் ‘தீவிரவாதி’ என்றும் கூறிக்கொண்டே பிரபஜோத் சிங்கை சரமாரியாக தாக்கி உதைத்தனர். இதில் அவருடைய முகம் வீங்கி, பற்களும் சேதம் அடைந்து பேசுவதற்கு கூட முடியாமல் அவதியுற்றார். பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் தாக்கிய நபர் ஒருவர் மட்டும் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், இருட்டாக இருந்ததால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார். இருப்பினும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் வாழும் சீக்கியர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment