Sunday, 15 September 2013

குடிபோதையில், 7-வது மாடியில் இருந்து குதித்த நோயாளி சாவு




கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் குடிபோதையில் 7-வது மாடியில் இருந்து குதித்த நோயாளி உயிரிழந்தார். கீழே நின்ற டாக்டரின் கார் மீது குதித்ததில் கார் நொறுங்கியது. காரில் இருந்து இறங்கிய நர்சு காயம் அடைந்தார்.
பரபரப்பு சம்பவம்
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிபவர் பாப்பாத்தி (வயது 48). இவரது கணவர் டாக்டர் செல்லத்துரை. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் உதவி பேராசிரியராக உள்ளார்.
டாக்டர் செல்லத்துரை நேற்று காலை 7.30 மணியளவில் தனது மனைவி பாப்பாத்தியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறக்கி விடுவதற்காக காரில் வந்தார். காரை மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு அருகே உள்ள அறுவை சிகிச்சை பிரிவு 7 மாடி கட்டிடத்தின் கீழே நிறுத்தினார்.
காரில் இருந்து பாப்பாத்தி கீழே இறங்குவதற்காக கதவை திறந்தார். அப்போது மருத்துவமனையின் மொட்டை மாடியில் இருந்து ஒருவர் கீழே குதித்தார். அவர் நேராக காரில் குதித்ததில், கார் கதவு நொறுங்கியது, நர்சு பாப்பாத்தியும் காயமடைந்தார். டாக்டர் செல்லத்துரை காருக்குள் இருந்ததால் காயமின்றி தப்பினார்.
குடிபோதையில்...
இந்தநிலையில் மாடியில் இருந்து கீழே விழுந்தவர் தலை மற்றும் தோள்பட்டையில் பலத்த காயத்துடன் துடி துடித்து உயிருக்கு போராடினார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த நர்சு பாப்பாத்திக்கும் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் கால்வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக குடிப்போதையில் மருத்துவமனைக்கு வந்தது தெரிய வந்தது. இறந்தவரின் சட்டபையில் இருந்த செல்போனில் தொடர்பு கொண்டபோது, மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தவர் சென்னை எம்.ஜி.ஆர்.நகர் தொல்கப்பியர் தெருவில் வசிக்கும் துணி வியாபாரி பிரபுவின், தந்தை குமார் (60) என்று தெரிய வந்தது.
குமார் இறந்த தகவல் அவருடைய மகன் பிரபுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிரபு உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்தார். தனது தந்தை குமாரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
தற்கொலையா?
பின்னர் பிரபு நம்மிடம் கூறும்போது, ‘ என் அம்மா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அதிலிருந்து என் அப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார். அவர் எங்கே வேலைபார்த்தார் என்று தெரியாது. ஆனால் அவ்வப்போது என்னிடம் வந்து பணம் வாங்கி செல்வார். கடந்த 3 மாதங்களாக என்னை அவர் பார்க்க வரவில்லை. போலீசார் இன்று (நேற்று) காலையில் உன் தந்தை ஆஸ்பத்திரி மாடியிலிருந்து குதித்து இறந்துவிட்டதாக கூறினார்கள்.’ என்றார்.
மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவர் கீழே விழுந்து இறந்த சம்பவத்தால் நேற்று கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிப்போதையில் கால் தவறி கீழே விழுந்து இறந்தாரா? என்பது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment