Sunday, 22 September 2013

மனநோய் இருப்பதால் மட்டும் விவாகரத்து வழங்க முடியாது-சுப்ரீம் கோர்ட்


புதுடில்லி:மனைவிக்கு வெறுமனே, மனநோய் இருப்பது மட்டுமே விவாகரத்துக்கு அடிப்படையாக அமையாது. நோய் பாதித்த அந்த பெண்ணுடன் சேர்ந்து, வாழ முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே, விவாகரத்து வழங்க முடியும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

நீதிபதிகள், ஜி.எஸ்.சிங்வி மற்றும் வி.கோபால கவுடா ஆகியோரை கொண்ட, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரிக்கப்பட்ட விவாகரத்து வழக்கு ஒன்றில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:இந்து திருமணச் சட்டத்தின்படி, திருமணமான ஒரு பெண்ணுக்கு, மனநோய் இருப்பதால் மட்டும், அந்த பெண்ணை, அவளின் கணவன் விவாகரத்து செய்ய முடியாது.
மாறாக, அந்த பெண்ணுடன் இணைந்து வாழ முடியாத அளவிற்கு, நோயின் தீவிரம் இருந்தால் தான், அந்த கணவருக்கு விவாகரத்து வழங்க முடியும்.

மேலும், கணவனின் வெறும் வாக்குமூலத்தை வைத்து மட்டும், அந்த பெண்ணுக்கு மனநோய் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட சோதனைகளில், மனநோய் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என, தெரிவிக்கப்படுகிறது.எனவே, வெறுமனே, ஒரு பெண்ணுக்கு மனநோய் இருப்பது மட்டுமே விவாகரத்துக்கு அடிப்படையாக அமையாது. எனவே, மனுதாரரின் விவாகரத்து கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நீதிபதிகள் தங்கள் உத்தரவில், இந்து திருமணச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளை சுட்டிக்காட்டி, இந்த தீர்ப்பை வழங்கினர்.

No comments:

Post a Comment